Homeகட்டுரைகள்ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தமிழர்களுக்கு சாதகமானதா?கட்டுரை!

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தமிழர்களுக்கு சாதகமானதா?கட்டுரை!

ஐநா மனித உரிமைகள் 46 வது கூட்டத்தொடர் தமிழர்களுக்கு சாதகமானதா?
ஓர் ஏரிக்கரையில் கிழட்டு கொக்கு ஒன்று வசித்து வந்தது, அதற்கு ஏரியில் இறங்கி மீன்களை பிடித்து உண்ண முடியவில்லை. கொக்கு தந்திரமாக மீன்களை பிடிக்க ஏரியில் இறங்கி அமைதியாக நின்று கொண்டது. மீன்கள் கொக்கின் பக்கம் வந்தபோது கூட அது மீன்களை பிடித்து உண்ணவில்லை, இதனை பார்த்த நண்டு ஒன்று கொக்கிடம் ஏன் மீன்களை பிடிக்கவில்லை என கேட்க, எனக்கு உயிர்களை கொல்ல விருப்பமில்லை செய்த பாவங்கள் எல்லாம் பொதும் நான் அன்பாக இருந்து என்ன பிரியோசனம் மீன்களுக் கெல்லாம் பேராபத்து ஒன்று வரப்போகிறது என நீலிக்கண்ணீர் வடித்தது கொக்கு. நண்டு என்ன ஆபத்து என கேட்க, இந்த ஏரியில் அனைத்து மீன்களையும் ஒரே நாளில் பிடித்து செல்ல வேண்டும் என சில மீனவர்கள் பேசிக்கொண்டதை கேட்டேன் என கூறிற்று. மீன்களெல்லாம் இதை கேள்விப்பட்டு கொக்கிடம் வந்து நாங்கள் உயிர்தப்ப வழியே இல்லையா என கேட்டன அதற்கு கொக்கு காட்டு பகுதியில் இன்னொரு குளம் உள்ளது என்மீது நம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் உங்களை சுமந்து சென்று அந்த குளத்தில் விட்டு விடுகிறேன் அங்கே மீனவர்கள் வர மாட்டார்கள் என நயவஞ்சகமாக கூறியது. அதன் பேச்சைக் கேட்ட மீன்கள் கொக்குடன் பயணம் செய்ய சம்மதித்தது. ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களை சுமந்து சென்ற கொக்கு பாறை ஒன்றின் மேல் போட்டு சாப்பிட்டு தீர்த்தது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் நிலமை மேற்கூறிய கதைக்கு ஒப்பானதாகவே இருக்கின்றது.
இலங்கையை பெறுத்தவரையில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதன் இறைமையில் வேறு நாடுகள் தலையிட முடியாது. ஊள்நாட்டில் உள்ள அரசியல் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். ஏன்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக உள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஐநா கூட்டத்தொடர் தொடர்பாக எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் தமிழர்களுக்கு தீர்வு வந்துவிடும் என்பது போல் அறிவிப்புக்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் மார்ச் மாதம் வந்துவிட்டால் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் தேசியம் பேசும் அமைப்புக்கள் பரபரப்பாக கிளம்பி விடுவார்கள். தமிழ் தேசிய பேரவையை உருவாக்க போகிறோம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடை பயணம், லண்டனில் அம்பிகை அம்மாவின் சாகும்வரை உண்ணாவிரதம், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் என ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வந்த வண்ணமுள்ளது.
கடந்த காலங்களில் கூட ஐ.நா கூட்டத்தொடர்கள் நடைபெற்ற காலப்பகுதிகளில் நாங்கள் தான் இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தோம் என தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் உரிமை கொண்டாடி அறிக்கைகளை விடுத்திருந்தன.
தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் ஒரு படி மேலே சென்று தாங்கள் கோரியதற்கு அமைவாக சர்வதேச விசாரணையை அப்போதைய அதாவது 2015 அம் ஆண்டு இலங்கை தொடர்பான விசாரணைக்கான ஐ.நா நிபுணர் குழுவின் ஒரு உறுப்பினரும். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூக்கா தலைமையில் சர்வதேச விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக வவுனியாவில் குருமன்காட்டில் அமைந்திருந்த தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல்; உறுப்பினர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கான ஐநாவின் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா, நீதியையும் பொறுப்புக் கூறலையும் அடைவதற்கு மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான சாட்சியங்கள் அவசியம் அத்துடன் மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.வின் அறிக்கைகள் சர்வதேச சமூகம் மற்றும் குறிப்பாக உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் முக்கியமானவை என தெரிவித்திருந்தார். இங்கே ஐநாவின் இலங்கைக்கான நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளராகிய யஸ்மின் சூக்கா இலங்கைக்கான சர்வதேச விசாரணை நிறைவு பெற்று விட்டது என எச்சந்தர்ப்பத்திலும் கூறியிருக்கவில்லை.
அதே போல் 2015 ஆம் ஆண்டு பி.பி.சி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணையை தாமும் தமது கட்சியும் வலியுறுத்தியதாகவும் அதற்கு முந்தைய ஆண்டு பங்குனி மாதம் சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான அறிக்கை ஒன்று இன்னும் வரவில்லை.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.குறித்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது வடக்கில் ஓரளவு அரசியல் செல்வாக்கை பெற்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு முன்னெறியுள்ள நிலையில் பிரித்தானியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் திருமதி அம்பிகை செல்வக்குமாருக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் 13 வது நாளை எட்டும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தர இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்து தனது அரசியல் சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளது.
இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ் தேசியம் பேசும் எந்த கட்சியும் உள்ளுரில் போராடுவதற்கு தயாராக இல்லை எங்கேயாவது போராட்டம் நடந்தால் அதை வைத்து அரசியல் இலாபம் பார்க்கும் நோக்கத்துடன் அறிக்கைகளை விடுவதற்கு மாத்திரம் தயாராக இருக்கின்றார்கள்.
மக்களை அணி திரட்டி அம்மக்களின் நியாயமான உரிமைகளை பெற்றுக்கொடுக்க போராட முன்வராத தமிழ் தேசிய கட்சிகள் ஐநா கூட்டத்தொடர், முள்ளிவாய்க்கால் நினைவுதினம், புலிகளின் மாவீரர் தினம் மற்றும் திலீபனின் நினைவு தினம் என சில நிகழ்வுகளை குத்தகைக்கு எடுத்து அரசியல் செய்து வருகின்றார்கள்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு தமிழ் தேசிய கட்சிகள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். அதில் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு காலம் கடத்தாமல் நீதி வழங்குமாறு உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தில் நடைபெற்ற கூட்டத்தொடர்களில் இதே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கியிருந்தனர்.
உண்மையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவரும் நிலையில் அவைகளை களைவதற்கான எந்தவிதமான காத்திரமான அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தயாராக இல்லை, வடக்கில் ஆக்கிரமிக்கப்படும் சைவர்களின் வழிபாட்டு தலங்கள், தமிழ் மக்கள் மீது தொல்பொருள் திணைக்களத்தால் தொடுக்கப்படும் வழக்குள், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள் குடியேற்றம், இரணதீவு மக்களின் பிரச்சனை, பட்டதாரிகள், சுகாதாரத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பறிபோகும் தமிழர் நிலங்கள் என தமிழ் மக்கள் தெருவில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் வேறு எங்கேயோ தங்கள் அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளாகிய அரசியல் கைதிகள் பிரச்சனை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை, மீள்குடியேற்றம் போன்றவை உள்ளபோதும் அவைகள் குறித்து இப்போது யாரும் பேசுவது இல்லை. இலங்கை அரசானது சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்க முன்வராத பட்சத்திலும் இலங்கையில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களை எரியூட்டி வந்த நிலையில் முஸ்லிம் மக்களின் சடலங்களை எரியூட்டுவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலர் அரசாங்கத்திடம் இஸ்லாமியரின் உடலங்களை புதைப்பதற்கு கோரிக்கை விடுத்த போதும் அக் கோரிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருந்தது.
ஐ.நா.வின் 46 வது கூட்டத்தொடரை இராசதந்திர ரீதியில் சாதகமாக பயன்படுத்திய முஸ்லிம் தலைமைகள் இஸ்லாமிய நாடுகள் ஊடாக இலங்கைக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசு முஸ்லிம் மக்களின் சடலங்களை எரியூட்டாமல் அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
கடந்த ஐ.நா.கூட்டத் தொடர்களில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி தேன்நிலவு கொண்டாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான இராசதந்திரங்கள் அற்ற ஒரு அரசியல் அமைப்பாகவும் சுயநலமிக்க அரசியல் கூடாரமாகவும் செயற்பட்டு வருவதானது தமிழ் மக்களை நிரந்தரமான அரசியல் கூ10னியத்திற்குள் தள்ளி விட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிகொண்டுள்ள இந்திய அரசானது ஈழத்தமிழர் விவகாரத்தை தனது பிராந்திய சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகின்றது. தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்களை தனது அரசியல் நலன்களுக்காக அவ்வப்போது பயன்படுத்தும் இந்தியா இறுதியில் கைவிடும் அல்லது அழித்துவிடும் இதுவே கடந்தகால வரலாறாக இருக்கின்றது. இப்போது இலங்கையின் சீன சார்பு நிலையை தடுப்பதற்கு ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா தனது பிராந்திய நலன் கருதி கையில் எடுத்துள்ளது.
இலங்கையில் சிங்கள மக்கள் சீன சார்பு நிலையையும், முஸ்லிம் மக்கள் இஸ்லாமிய நாடுகளின் அரசியல் ஆதரவு நிலையையும் பெற்று தங்கள் அரசியல் இருப்பை தக்கவைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் உலக நாடுகளினால் ஒதுக்கப்பட்டவர்களாக அரசியல் பலமற்றவர்களாக அனைத்து தரப்பினராலும் ஏமாற்றப்பட்டு தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடி வரும் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
இந்து மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அமரிக்கா இந்தியா போன்ற வல்லரசுகளின் தேவைக்கு ஏற்பவே இலங்கை விவகாரம் ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கையாளப்படும் என்பதனை உறுப்பு நாடுகள் வழங்கிய பரிந்துரையில் காணக்கூடியதாக உள்ளது.
தமிழ் தேசிய கட்சிகளையும், தமிழ் மக்களையும் நம்பவைக்கும் நோக்கில் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளரின் பரிந்துரையில் ஐ.சி.சி எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த வேண்டும் என்ற வாசகம் காணப்பட்டது.
ஆனால் தற்போது இலங்கை விவகாரத்தை கையாளும் பிரித்தானியா தலைமையிலான நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலாவி, மசிடோனியா மற்றும் மொன்றியோ ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கருக்குழு நாடுகள்; வழங்கியுள்ள பரிந்துரையில் ஐ.நா.ஆணையாளரியால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் முற்றாக நீக்கம் செய்யப்பட்டு அமரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகள் தமக்குரிய புவிசார் அரசியல் நிலைசார்ந்து பேரம் பேசக்கூடிய வகையில் அமைந்துள்ளன.
உலக அரசியலில் இந்தியாவை மையப்படுத்தி அமரிக்கா மற்றும் பிரித்தானியாவி;ன் காய் நகர்த்தல்கள் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கப் போவதில்லை.
சீனாவிடம் இலங்கை சார்ந்துவிடக் கூடாது எனும் வல்லாதிக்க நாடுகளின் அச்சத்தை இலங்கை திறம்பட கையாள்கின்றது. இந் நாடுகளின் அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இலங்கை ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு மற்றும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் பொறிமுறைகளை இலங்கை தனக்கு சார்பாக பேரம் பேசி மாற்ற முனைகின்றது.
இலங்கையை அமரிக்கா மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க சக்திகள் அச்சுறுத்துகின்றன என்பதற்கு பதிலாக இலங்கையிடம் அவைகள் மண்டியிடுகின்றன என்பதே பொருத்தமாகும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள், புலம் பெயர் அமைப்புக்கள் வல்லாதிக்க நாடுகள் தீர்வை பெற்றுத்தர போவதாக தமிழ் மக்களை நம்பவைத்து ஏமாற்றுகின்றனர்.
ஐ.நாவில் கருக்குழு நாடுகள் சமர்ப்பித்த வரைபில் இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையை காப்பாற்றும் விதத்திலும், இலங்கையுடன் பேரம் பேசக்கூடிய வகையில் அமைந்துள்ளதுடன், இலங்கையின் பொறுப்பக்கூறல் மாத்திரம் வலியுறுத்தப்பட்டு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்து பரிந்துரையின் ஆரம்பத்திலேயே இலங்கையின் இறைமை,தனித்துவம் போன்ற ஒற்றையாட்சி தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.
ஈழத்தமிழ் மக்கள் கோருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
உலகில் எந்த ஒரு நாடும் ஈழத்தமிழருக்காக இதய சுத்தியுடன் குரல் கொடுக்க போவதில்லை மாறாக தமது நலன்சார்ந்த விடயங்களுக்கு எதிராக இலங்கை செயற்பட எத்தனிக்கும் போது இலங்கையை பணிய வைக்க அல்லது கடிவாளம் இடுவதற்காக மாத்திரம் ஈழத்தமிழர் விடயங்கள் கையில் எடுக்கப்படும்.
தமிழ் தேசிய கட்சிகளின் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை மேலும் மோசமாக்கும் என்பதுடன் ஐ.நா.வையும், இந்தியாவையும் நம்புவது தமிழ் மக்களை மேலும் அரசியல் நாதியற்ற இனமாக மாற்றிவிடும். ஆகவே ஈழத்தமிழர்களின் கட்சி அரசியலுக்கு அப்பாலான ஒன்றுபட்ட அரசியல் திரட்சியே அவர்களின் அரசியல் உரிமைகளை பெற்றுத்தரும், இல்லாவிட்டால் கொக்கை நம்பிய மீன்களின் கதையாகவே ஈழத்தமிழரின் கதை முடிந்துவிடும்.
நன்றி
எம்.ஜி.ரெட்ன காந்தன்

Leave a comment