Homeகட்டுரைகள்இரணதீவு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா??

இரணதீவு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா??

இரணதீவு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா??
(மயான பூமியாக மாறுகிறதா இரணைதீவு!!)
இலங்கையின் வடக்கு பகுதியில் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றது. அந்தவகையில் இரணைதீவு என்னும் கிராமமானது கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பிரதேசங்களின் நிலத் தொடர்ச்சியிலிருந்து கடலுக்குள் இருபது கிலோமீற்றர் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இரணைதீவு அமைந்துள்ளது.
வடக்கில் தீச்சுவாலையக பரவிய உள்நாட்டு போரானது இரணைதிவில் வசித்து வந்த 417 குடும்பங்களை சேர்ந்த மக்களையும் விட்டு வைக்கவில்லை. மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் கொடும் யுத்தம் காரணமாக உயிரை காப்பாற்ற தங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு; அகதிகளாக 1997 இல் இடம் பெயர்ந்து அருகிலுள்ள முழங்காவில், நாச்சிக்குடா மற்றும் கிளிநோச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியேறியிருந்தனர்.
இரணைதீவு மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற உடமைகளை கைவிட்டு அகதிகளாக சென்றதன் பின்னர் அத்தீவை இலங்கை கடற்படையினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு வன்முறையானது 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், அப்போதைய இலங்கை அரசானது இரணைதீவு மக்களை அவர்களின் பூர்வீக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் தமிழ் மக்களின் போராட்டங்கள் ஓய்திருக்கவில்லை. மழை ஓய்ந்தும் தூவானம் விடவில்லை என்ற வகையில், இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை, தொல் பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களின் கெடுபிடி என தமிழ் மக்கள் இப்பிரச்சனைகளுக்கு எதிராக போரட்டங்களை நடத்தியவாறே கடந்த 12 வருடங்களாக வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசானது இரணைதீவு மக்களை மீள்குடியேற்றம் செய்யாத காரணத்தாலும், தமிழ் தேசியம் பேசி தமிழ் மக்களிடம் ஓட்டுக்களை பெற்று பாராளுமன்றம் சென்றும் இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகை செய்யாத உள்ளுர் அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் இரணைதீவு மக்கள் தங்களை தங்கள் சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரிக்கைய முன்வைத்து போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இரணைதீவு மக்களின் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக ஜனநாயக ரீதியிலான போரட்டத்தின் பின்னரும் இலங்கை அரசாங்கமோ அல்லது உள்ளுர் அரசியல்வாதிகளோ அம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத நிலையில் பொறுமையிழந்த இரணதீவு மக்கள் 23 ஏப்பிரல் 2017 இல் தங்கள் சொந்த முயற்சியில் 50 மீன் பிடிப்படகுகளில் வெள்ளைக் கொடிகளை கையில் ஏந்தியவாறு கடலைக் கடந்து தமது தாய்மண் நோக்கி பயணப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு இரணைதீவு கிராமத்தில் தரை இறங்கிய மக்கள் தங்கள் மீள் குடியேற்றத்திற்காக இன்று வரை போராடி வருவதுடன் சிறுகச் சிறுக தங்கள் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பி வருகின்றனர்.
இரணைதீவை சூழவுள்ள கடலானது பல்வேறுபட்ட கடலுணவு நிறைந்த பகுதியாக காணப்படுவதுடன் ஏற்றமதி தரத்திலான கடலட்டைகளும் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகின்றது. அத்துடன் இத்தீவின் மண்வளமானது கால்நடை வளர்ப்பிற்கும் பயிர்ச் செய்கைக்கும் உகந்ததாக காணப்படுகின்றது.
தரைப்பகுதியான முழங்காவில் பகுதியிலிருந்து இரணைதீவுக்கு படகில் ஒன்றரை மணி நேரத்தில் பயணிக்க கூடியதாக இருக்கும். அதே வேளை காலநிலை சீராக இல்லையானால் பயணம் செய்ய முடியாத ஒரு நிலைமையே அங்கே காணப்படும்.
இலங்கை அரசானது ‘கொரோனா’ வைரஸ் காணமாக இறப்பவர்களின் உடலங்களை குறிப்பாக முஸ்லிம்களின் உடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதானது அத்தீவின் மக்களின் மனங்களில் பாரிய கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் இவ் அறிவிப்பை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் புதைகுழியாக மாற்ற எமது தீவை அனுமதிக்க மாட்டோம், அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் விவேகமற்ற இத்தீர்மானத்தை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்து இரணைதீவில் பொதுமக்கள், சமயத் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவைட் பெருந்தொற்றினால் உயிரிழப்பவர்களை தொடர்ச்சியாக எரியூட்டி வந்த இலங்கை அரசாங்;கத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அழுத்தம் காரணமாக முஸ்லிம்களின் உடலங்களை அவர்களின் ஆகம விதிப்படி புதைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியதுடன். இலங்கையில் மக்கள் வாழாத நடமாற்றம் அற்ற பல தீவுகள் மற்றும் பிரதேசங்கள் இருக்கும் நிலையில் இரணைதீவு பகுதியை கொரோனாவினால் இறந்தவர்களின் உடலங்களை புதைப்பதற்கு ஏற்ற இடமாக பரிந்துரை செய்துள்ளமை ஏன் என்ற கேள்வி பொது மக்களிடம் தொக்கி நிற்கின்றது.
கோவிட் பெரும் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை சுகாதாரத் துறை நிபுணர்களால் ஆறு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளதன் மூலம் அரசானது திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சனையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் தெரிவித்துள்ள கருத்தானது ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
இரணைதீவு கிராமத்தில் மக்கள் மீள்குடியேறி வரும் நிலையில் கொரோனா பெருந் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை அடக்கம் செய்ய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை அத்தீவிலிருக்கும் மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இரணைதீவில் உடலங்களை அடக்கம் செய்வதை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா இரணைதீவில் கடலட்டை ஏற்றுமதி கிராமம் ஒன்றை உருவாக்கி அரசாங்கத்திற்கு வருடம் தோறும் 25 ஆயிரம் அமரிக்க டொலருக்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்;டித்தருவதோடு 350 ற்கு மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பவர்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு ஏற்ற இடம் இரணைதீவு அல்ல என்ற அறிக்கையும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதாக தெரிவித்த கருத்தானது, இரணைதீவு மக்களை ஆறுதலடையச் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இறப்போரின் உடலங்களை எமது மையவாடிகளிலே அடக்கம் செய்யுங்கள் பக்க விளைவுகளுக்கு நாம் பொறுப்பேற்கிறோம் என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதானது சிறுபான்மை இனங்களுக்கிடையிலான ; ஒரு நல்ல புரிந்துணர்வுக்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வே;ண்டும். சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாடும் இலங்கை அரசுக்கு உள்ளது என்பதுடன் சகல வளங்களும் நிறை;ந்த இரணைதீவு மண்ணை மயான பூமியாக மாற்றாது அத்தீவின் மக்களை விரைவாக மீள்குடியே;ற்றம் செய்ய இலங்கை அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என்பதுவே அம் மக்களின் கோரிக்கையாகும்.
பாராபட்சமற்ற பௌதீகவளப்பங்கீடுகள் யுத்தத்தால் நலிந்து போயுள்ள மக்களையும், அம்மக்களின் சொந்த நிலமான இரணதீவையும் செழிப்படையச் செய்யும்.
இலங்கை அரசாங்கத்தின் சாதகமான செயல்பாடுகள் சிறுபான்மை மக்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் பயணிக்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நன்றி
எம்.ஜி.ரெட்னகாந்தன்

Leave a comment