Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான்.
**********************************
எமது நாடும்  உலகமும் எதிர்நோக்குகின்ற ஒரு வித்தியாசமான காலமொன்றில் எம்மை வந்தடைந்துள்ள இந்த புனிதமிகு ஈதுல்பித்ர் நோன்பு பெருநாளை மிகவும் அமைதியான முறையில் ஆரவாரமின்றி வீடுகளில் இருந்து அனுஷ்டிக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தற்போதைய காலகட்டத்தில் கொரோனா நோய் தொற்றானது நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகின்றது.
 இந்த தொற்றுநோயின் பரவலையும் அதன் தாக்கத்தையும் குறைப்பதற்காக சுகாதார பிரிவினர் வழங்கிவரும் அறிவுறுத்துதல்களையும், ஆலோசனைகளையும் அலட்சியம் செய்யாது இயன்றளவு பின்பற்றுமாறும் மிக முக்கியமாக முகக்கவசங்கள் அணிந்து  சமூக இடைவெளிகளை பேணி நடப்பதுடன் அனாவசியமாக ஒன்று கூடுவதை முற்றாக தவிர்ந்து வீடுகளில் தரித்திருந்து நல்லமல்களில் ஈடுபடுமாறு உங்களை நான் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.
எதிர்வருகின்ற நாட்களில் இந்த கொடிய கொரோனா தொற்றின் வீரியம் எவ்வாறு தாக்கம் செலுத்த போகின்றது எனும் ஒரு அச்சத்துடனான எதிர்பார்ப்பு எம் அனைவரினதும் மனதில் நிலைகொண்டுள்ளது. வணக்க வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்களுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் நாட்டின் தற்போதைய நிலையை கருதி பொறுமையுடன் நடந்து கொள்ளுமாறு நான் உங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எமது புனித மார்க்கமானது அமைதி, இரக்கம்,  ஒற்றுமை, பொறுமை, மனிதநேயம், ஜீவகாருண்யம் ஆகிய உயரிய குணவியல்புகளை கொண்டுள்ளது என்பதை திட்மாகவும் உறுதியாகவும் அறிந்து வைத்துள்ளோம்.
இல்லாவிட்டால் இஸ்லாம் மார்க்கமானது உலகளாவிய ரீதியில் இவ்வாறு வளர்ந்திருக்க முடியாது.
இன்று நாம் எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாம் கொண்டுள்ள உயரிய குணவியல்புகள் மூலம் எமது ஒற்றுமை மிக்க தாய்நாட்டை கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு கண்ணியமிக்க ரமழான் மாதத்தில் நாம் எடுத்துக்கொண்ட பயிற்சிகளையும் செய்துவந்த இபாதத்துக்களையும் தொடர்ந்து செய்வதுடன் வசதியற்றிருக்கும் எமது சகோதரர்களை இனங்கண்டு தானதர்மங்களை செய்து இறைவனின் நல்லருளை பெற்ற நல்லடியார்களாக மாறுவோமாக.
நன்றி.
அன்புடன்
கே. காதர் மஸ்தான்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும்.

Leave a comment