Homeசோசலிசம்கொடியன்குளத்தில் தெரிவது முள்ளிவாய்க்கால், (கட்டுரை)

கொடியன்குளத்தில் தெரிவது முள்ளிவாய்க்கால், (கட்டுரை)

மே தினத்தில்
வரலாற்று இயக்கு சக்தி
மாறுநிலையைக்
கவனங்கொள்வோம்!
கொடியன்குளத்தில் தெரிவது முள்ளிவாய்க்கால்
இன்று அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் ஊர் கொடியன்குளம். “கர்ணன்” என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்தக் கிராம ம் நோக்கிய ஊடக யாத்திரையும் மக்களின் ஈர்ப்பும் வலுத்துள்ளது. இத்தனை கவனக்குவிப்பு அந்தத் திரைப்படக் கதைக் களமாக அந்தக் கிராம ம் ஆவதற்குக் காரணமாக இருந்த 1995 ஆம் ஆண்டில் இருந்ததில்லை. இப்போது ஊடகத்துறை அடைந்திருக்கும் வளர்ச்சி அப்போது இல்லாதிருந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம் என்பதற்கில்லை; அந்த ஊரை ஆட்சி நிர்வாகப் பிரிவுகள் அனைத்தும் இணைந்து நிர்மூலமாக்கிய போது ஆட்சி பீடத்தில் இருந்த கும்பலின் கைகள் அவற்றை இயக்கின என்பதோடு எதிர் கட்சியும் கண்டுகொள்ள விரும்பவில்லை, அடுத்த தேர்தல் வெற்றி கருதி. ஊடகங்களும் சாதிய ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமல் விடும் உத்தியைக் கையாண்டன.
அவ்வேளையில் “நக்கீரன்” மட்டுமே உண்மை அறியும் குழுவுடன் இணைந்து சென்று அந்தக் கிராமத்துக்கு நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தி இருந்தது என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் செவ்வியொன்றில் கூறியுள்ளார். கர்ணன் திரைப்படத்தில் காட்டப்பட்டதைவிட அக்கிராம ம் தாக்கியழிப்புக்கு முன்னர் செழிப்புடன் இருந்ததென அவர் கூறியுள்ளார். பலரும் இவ்விடயத்தை வலியுறுத்துகின்றனர். தேவேந்திர குல வேளாளரென அழைக்கப்படும் பள்ளர் சாதியினர் அங்கு ஒரே இடத்தில் பெரும்பான்மையாக உள்ளனர்; நாடுகடந்து சென்று தேடிய செல்வத்தைக்கொண்டு வளமாக வாழ்ந்தனர். அப்போதே தொலைக்காட்சிப் பெட்டிகளுட்பட பல சாதனங்களைப் பயன்பாட்டுக்கு வழக்கப்படுத்தி இருந்தனர். கல்வியிலும் அரச பதவிகளிலும் உயர்ந்திருந்தனர். இத்தகைய முன்னேற்றங்கள் காரணமாக தென் மாவட்டங்களில் தமது சாதியினர் சாதி வன்முறைகளில் பாதிக்கப்பட்ட போதெல்லாம் விரைந்து சென்று உதவுகிறவர்களாக இருந்துள்ளனர்.
இந்த அம்சங்கள் காரணமாகவே காவல்துறை ஊரினுள் பிரவேசித்த கணம் முதல் இவர்களைக் கருவறுப்பதன் வாயிலாக ஏனைய இடங்களிலும் அந்த மக்களை அடக்கி ஆள இயலும் என்று கண்டனர்; செயல் வடிவங்களையும் கொடுத்தனர். மாவட்டக் கலக்டரும் அதற்கு உறுதுணையாக இருந்தார். அரசாங்கத்தில் முதலமைச்சரது அன்புச் சகோதரியாக இருந்தவருடன் நெருக்கமானவர்களாக இந்த அழித்தொழிப்பு தலைச்சன்கள் இருந்தார்கள் என்பதும் இவர்கள் முக்குலத்தோரெனும் சாதிப்பிரிவினர் என்பதும் கவனிப்புக்கு உரியது.
இந்தப் பிரச்சினைக்கான அடித்தளம் வேறோர் ஊரில் பேருந்து நடத்துனருடன் தொடங்குகிறது. ஏற்கனவே தென் மாவட்டங்கள் பலவற்றில் தேவேந்திர குல வேளாளருக்கும் முக்குலத்தோருக்கும் இடையே கலவரங்களும் கைகலப்புகளும் அடிக்கடி இடம்பெற்று வந்த காலச்சூழல் அது. முக்குலத்தோரான மாணவர்கள் பஸ் ஓட்டிச்செல்ல இடைஞ்சலாக பாதையை அடைத்து நடந்தது பற்றி தேவேந்திரகுல வேளாளரான சாரதி மாணவர்களுடன் மோத நேர்ந்து, அங்கிருந்து சென்று பேருந்து திரும்பி வந்த பொழுது சாரதி சாதி வன்மத்துடன் சுற்றுவட்ட முக்கிலத்தோரால் தாக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சுற்று வட்டாரக் கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் தாக்கப்படுவதும் இறுதியில் கொடியன்குளத்தினுள் அரசுயந்திரம் முழுதாக அழித்தொழிப்பில் ஈடுபடுவதும் (1995 இல்) இடம்பெற்றது.
அந்தக் கொடூரத்தைச் சூடாறுமுன் சென்று பார்த்த அனுபவத்தை நக்கீரன் பிரகாஷ் கூறுகிற போது ஒடுக்கப்பட்டிருந்த அந்தச் சாதிப்பிரிவினர் தலையெடுக்கக்கூடாது என்பதற்காக இடம்பெற்றதென்ற வகையில், ‘ஈழத்தமிழர்கள் தமக்கு ஏற்பட்டதாக கூறுவதைப்போன்ற இனவழிப்பு இது’ என்று கூறியிருந்தார். தமிழ் தேசியத்துக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை ஒரு தலித்தேசியத்துக்கு நடந்த அட்டூழியத்துடன் எப்படிச் சம ப்படுத்திப் பேச இயலுமென எம்மவர் கொந்தளிக்க அவசியமில்லை, ஈழத்தமிழருக்கு நேர்ந்த அநீதியின் உச்ச வரம்பு எத்தனை கனதிமிக்கதோ அதைப்போல இதை உணர வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பீட்டை அவர் செய்திருந்தார்; குறைமதிப்பீட்டு எண்ணம் அவருக்கு இருந்திருக்கவில்லை.
உண்மையில் இரண்டுமே இனவழிப்பல்ல. ஈழத்தமிழர் போர்க்குணத்தைக் கருவழிக்க வேண்டுமென்ற கருத்தோடு பேரினவாத இராணுவம் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது; அதற்கு வாய்ப்பாக குறுகிய இடமான முள்ளிவாய்க்கால் வரை ஈழத்தமிழ் மக்கள் எடுத்துச் செல்லப்பட்டுக் காவுகொடுக்கப்பட்டனர். கொடியன்குளத்தில் சாதிவெறிக் காவல்படையினரால் ஏறத்தாழ ஐம்பது பேர்வரை அன்றைய சம்பவத்தின்போது அக்கிராமத்தில் கொல்லப்பட்டனர், பலர் கைகால் வெட்டப்பட்டு ஊனமாக்கப்பட்டனர், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர் என நக்கீரன் பிரகாஷ் மேற்படி செவ்வியில் கூறியிருந்தார்; அக்கிராமத்தின் குடித்தொகைக்கு இது மிகப்பெரும் அழிவு. அவர்களது பொருளாதார வளம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டதோடு மீள எழவியலா வகையில் மேற்கொள்ளப்பட்ட வக்கிரமிக்க தாக்குதல் என்ற வகையில் முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பீடு செய்வது மிகைப்பட்டதல்ல!
அடிப்படையான வித்தியாசம், முள்ளிவாய்க்கால்வரை மக்களைக் கேடயமாக எடுத்துச் சென்ற போராட்ட சக்தி அங்கே அதனது ஆயுதங்களை மௌனித்துக்கொண்டது. கைகளில் ஆயுதம் இல்லையெனில் மன வைராக்கியத்துடன் அரசியல் யுத்தத்தை மேற்கொள்ள ஏற்ற கல்வி வழங்கப்பட்டில்லாத (‘செய் அல்லது செத்துமடி’ என்ற காந்தியின் கோசத்தை இந்த அம்சத்தில் ஏற்று சயனைட் குப்பியைக் கழுத்தில் தொங்கவிட்டுத்திரிந்த) போராளிகளால் மீண்டெழ இயலவில்லை. பின்வந்த அரசியலாளர்கள் முள்ளிவாய்க்காலைப் பிச்சைக்காரப் புண்ணாக்கி வாக்குப்பொறுக்க எத்தனிக்கின்றனரே அன்றி விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்புக்கு ஏற்றதான நடவடிக்கைகள் குறித்த அக்கறை அற்று உள்ளனர்.
கொடியன்குளம் இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக, வீறுடன் பொங்கியெழுந்து கைகளில் ஆயுதங்களை ஏந்தி எதிர் தாக்குலை மேற்கொண்டது. தம்மைத் தாக்கும் முக்குலத்தோரைத் தேடித்தேடி வாள்களால் வெட்டிச் சாய்த்தனர். அவ்வாறு ஆயுதமேந்திப் போராடியதனால் அதற்குப்பின்னர் அதுபோன்ற அழித்தொழிப்பு அந்த இனத்தவர் மேல் மேற்கொள்ளப்படவில்லை, ஆங்காங்கே சாதி மோதல்கள் மட்டுமே தொடர்ந்தன, கொலைக்குக்கொலை, அடிக்கு அடி என்பதை நிறுத்த இயலவில்லை என்று நக்கீரன் பிரகாஷ் கூறத்தவறவில்லை. அவற்றை நிறுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டர் சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டபோது கொடியன்குளம் ‘எங்களால் வேறெதுவும் செய்ய இயலவில்லை, வாளேந்துவதைத் தவிர’ என்றபோது சாதிவெறி ஆணவத்துடன் கலெக்டர் சொன்னார் ‘நீங்கள் வாழேந்தினால் நாங்கள் துப்பாக்கியைத் தூக்குவோம்’ என்று.
அவ்வாறு அரசுயந்திரத்தால் தொடர்ந்து ஆதிக்க சாதிப் பக்கத்தில் மட்டும் இருக்க இயலவில்லை. அந்தச் சாதிவெறிக் கலெக்டர் கூறியதுபோலத் தொடர்ந்து துப்பாக்கி பேசியிருப்பின் அந்த மக்களும் துப்பாக்கிகளால் பதிலிறுத்திருப்பர் என்பது நிதர்சன உண்மையாக வெளிப்பட்டு இருந்தது. ஏற்கனவே அந்தக் கிராமத்தினுள் உண்மை அறியும் குழு எனச் செல்லும் ஒழுங்கமைவை மேற்கொண்டது கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) பிரிவு ஒன்று. அவர்களுக்கான வலுவான அரசியல் முன்னெடுப்புக்கு ஏற்ற அதிக வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்பதில் அரசு யந்திரம் எச்சரிக்கையுடன் இருந்தது.
அந்த உண்மை அறியும் குழுவுடன் சென்றவர் தான் மருத்துவர் கே.கிருஷ்ணசாமி. அவர் அதே தேவேந்திரகுல வேளாளர். அதனூடாக அவர் அச்சாதித் தலைவராக வளர ஆட்சியியலும் ஊடக அரக்கனும் உதவிகள் புரிந்தன. “புதிய தமிழகம்” என்ற அவரது சாதிக் கட்சி உதயமாகி எழுச்சி கொள்ள கொடியன்குளம் வலுவான அடித்தளமாக்கப்பட்டது.
இன்று அவரிடமும் (புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடமும்) நேர்காணல் பெறப்பட்டது. அந்த மக்களது போர்ச் சுவாலையின் உத்வேகத்தினாலேயே தான் தலைவராக்கப்பட்டேன் என்பதைக் கூறுவதற்கு மாறாகத் தலைகீழாக்கி, தனது தலைமையும் புதிய தமிழகம் கட்சியின் எழுச்சியுமே அந்த மக்களுக்கு கேடயமாக அமைந்தது எனகிறார். செவ்வி கண்டவரும் ‘உங்களை அந்தக் கிராமத்தில் நிஜ கர்ணன் எனக் கூறி வரவேற்றார்களாமே’ என்றபோது அதனை மறுத்து அந்தக் கிராம ம் முழுமையும் கர்ணன்களாக ஆயுதமேந்தி இருந்தது’ என்று சொல்வதை விடுத்து அதனை அங்கீகரிக்கும் அற்பத்தனமான அரசியலாளராக அவர் நடந்துகொண்டார். சினிமாவும் அந்த மக்கள் எழுச்சியின் முழுமைப் பரிமாணத்தை வெளிக்கொணர இயலாமல் வெறும் தனிமனித வீர சாகசமாக (ஹீரோ இஸமாக) குறுக்கிவிட்டதோ என்ற நெருடலும் எழுந்தது.
தமிழகத்தில் “கர்ணன்” படத்தைப் பார்த்த தோழர்களது கருத்து இந்த நெருடல் அவசியமற்றது என உணர்த்தி நிற்கிறது. மார்க்சிய நோக்கை வரித்தபடி சமூகச் செயற்பாட்டாளராக இயங்குபவர், மற்றும் சினிமாக் கலையைக் கற்றுத்தரும் விரிவுரையாளர் என வெவ்வேறு பார்வைக்கோணங்கள் வாயிலாக அணுகும் தோழர்கள் அத்திரைப்படத்தைப் பார்த்து விதந்துரைத்து விமரிசனங்களை முன்வைத்திருப்பதனை அறிய இயலுமாக உள்ளது. கதை கூறுவதை விடவும் உணர்வலைக்குள் பாத்திரங்களது வாழ்வியலைக் கடத்தும் கலையாக விளங்குவது சினிமா என்ற வரைவிலக்கணத்துக்குத் தமிழில் சிறந்த எடுத்துக்காட்டாக கர்ணன் திரைப்படம் திகழ்கிறது என்பது அந்த விமரிசகர்களது கருத்து.
அவர்கள் வெளிப்படுத்தும் இன்னொரு கருத்தும் முக்கியத்துவம் உடையது. குறியியல் ஊடாகப் பல விடயங்களைப் பேசும் இத்திரைப்படம் கர்ணன் என்பதைக்கூடக் குறியீடாகவே முன்வைக்கிறது; போர்க்குணத்துடன் திருப்பி அடிக்கும் மக்கள் எழுச்சிக் குறியீடு கர்ணன். அந்தவகையில் கதாநாயகனான கர்ணன் தனிமனித வீரசாகசக்காரன் என்பதைவிட வரலாற்றில் தனிநபர் வகிக்கும் முனைப்புமிகு பாத்திரமாக எழுச்சி கொள்கிறான். இதற்கு உதாரணமாக ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைப் புரட்சியெழுச்சியின் குறியீடாக வெளிப்பட்டுக் கொண்டாடப்படும் ஸ்பார்ட்டகசை அந்த விமரிசகர்கள் ஒப்பீடு செய்கின்றனர்.
ஆக, புரட்சித் தலைவர்களாக மேலெழத்தக்க கர்ணன்கள் தனிமனித வீரசாகச நாயக விம்பங்களினின்றும் வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்பது தெளிவு. பிரச்சினை, புதிய தமிழகத் தலைவரான கிருஷ்ணசாமியால் அத்தகைய புரட்சி நாயகனாகத் தொடர்ந்து இயங்க இயலவில்லை என்பதில்தான் உள்ளது. அவர் மக்களுக்குத் துரோகமிழைத்து மக்கள் விரோதிகளுடன் காட்டிக்கொடுப்பு அரசியலை மேற்கொள்கிற சிதைவுகளுக்கு ஆளாகிவிட்டவர்.
அந்த எழுச்சி 1991 ஆம் ஆண்டின் அம்பேத்கர் நூற்றாண்டுடன் இந்தியா முழுவதும் தலித் விழிப்புணர்வு மேலோங்கி மக்களைச் செயலுக்கு உந்தியதன் ஒரு உச்சக் குறியீடாக அமைந்த ஒன்று. அனைத்துத் தலித் பிரிவினரையும் இந்த எழுச்சியின் பங்குதார ராக்குவதற்கு மாறாக தேவேந்திரகுல வேளாளரைப் பட்டியல் சாதியினின்றும் நீக்கும் தனிச்சாதி விவகாரமாக்கிக் குறுகிய அரசியல் ஆதாயம் தேட முனைந்த துரோகத் தலைவராக அவர் வெளிப்பட்டு நிற்கிறார்.
நூறாண்டுக்கு முன்னர் நாடார் சாதியினர் தீண்டாமைக்கு உரிய பட்டியலில் இருந்து வெளியேறிய சமூக அசைவியக்கம் நடந்தது மெய்; அன்று அச்சாதிப் பிரிவினர் தனித்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சூழலினாள் அதைக் குற்ற விமரிசனத்துக்கு உட்படுத்துவதை விடத் தலித் அரசியல் எழுச்சி வரலாற்றரங்கில் மேலோங்கிவிட்ட நிலையில் கிருஷ்ணசாமி ஏற்படுத்தும் பிரிவினை மன்னிக்க இயலாத ஒன்று. ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் அனைவரும் ஏனைய அனைத்து மக்களுக்கும் உரியதான பூரண குடியுரிமை பெறுவதற்கான போர்க்குரலாக அவர் திகழ்ந்திருந்தால் மட்டுமே நிஜ கர்ணன் எனப் போற்றப்படும் தகுதியைப் பெற்றவர் ஆக இயலும்.
இலங்கையில் கொடியன்குள எழுச்சிக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் (அறுபதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் இருந்து) சாதி வெறியர்களின் ஆயுதமேந்திய ஒடுக்குதலை ஆயுதமேந்தி முறியடித்த வரலாறு இடம்பெற்றிருந்தது. அவ்வாறு திருப்பித் தாக்குவது தமிழகத்தில் இடம்பெற்றதைப் போன்ற ‘கொலைக்குக் கொலை’ என்ற தொடர் வன்முறை மோதலாக அமைந்ததில்லை. ஆரம்பம் முதலே கொம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலுடன், மார்க்சியப் புரிதல்கொண்ட போராளிகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் களத்தில் இயங்கினர். சாதிவெறியரில் எந்தவொருவரை அழிப்பது தொடர் தாக்குதலை நிறுத்துமெனக் கூடி முடிவெடுத்து ஆயுதப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக அந்த வரலாற்று இயக்கம் இருந்தது. கட்சிக் கோட்பாடு, ஸ்தாபனக் கட்டுக்கோப்பு, கூட்டு முடிவு என்ற விடயங்கள் இவ்விவகாரங்களில் இடம்பெற்றிருந்தன என்பதனை தேவகாந்தனின் “யுத்தத்தின் முதலாம் அதிகாரம்” என்ற நாவலும் எடுத்துக்காட்டி இருந்தது.
அத்தகைய கொலைச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து நிச்சாமக் கிராம ம் பொலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது போராளிகள் வெள்ளாளர் வீடுகளில் கரந்துறையும் அளவுக்கு கொன்றொழிக்கப்பட்ட சாதிவெறிச் சண்டியனுக்கான தண்டனையை அந்த மக்களால் அங்கீகரிக்க இயலுமாக ஆக்கப்பட்டு இருந்தது. அது சாதிப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு இருக்கவில்லை. “சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைத் திணை அரசியலாக அது அமைந்திருந்தது.
கொடியன்குளம் மக்கள் போராட்டமும் அவ்வகையில் விடுதலைத் திணை அரசியலாக வளர்க்கப்பட வேண்டிய ஒன்று. அடையாள அரசியல் மேலாண்மையுடன் இயங்கும் இந்தியாவில் உடனடியாக அது சாதிக்கட்சி வலுப்படக் களம் அமைப்பதாகிவிட்டது. இன்று புதிய தமிழகம் பல வகைகளில் அம்பலப்பட்டுள்ள நிலையில் மார்க்சியர்கள் அந்த அனுபவங்களை விடுதலைத் திணை அரசியலாக மாற்றத்தக்க முயற்சியை முன்னெடுத்தவாறே உள்ளனர்.
இலங்கை அரசியலில் திணை அரசியல் செல்நெறியே மேலாண்மை உடையது என்ற போதிலும் முள்ளிவாய்க்கால் அனுபவங்களைப் போர்க்குணத்துடன் விமரிசனம் – சுயவிமரிசனம் என்ற அரசியல் விழிப்புணர்வுடனான மறுபரிசீலனைக்கு உரியதாயாக்க இயலவில்லை; பிச்சைக்காரப் புண் அரசியலாக இயக்கும் சக்தி இன்னமும் இந்தக் களத்தில் வலுப்பட்டு வரக் காண்கிறோம்.
வர்க்க அரசியலை முன்னெடுத்துவந்த மார்க்சியர்கள் அது தீர்மானகரமானதாக அமைந்திருந்த பொழுது மக்கள் இயக்கங்களுக்கு தலைமை ஏற்பவர்களாக இருக்க இயலுமாயிற்று. முழுச் சமூக சக்திகளுக்கு உரியதான திணை மோதலாக சாதி, தேசிய இன அரசியல் அமைந்துள்ள இன்றைய நிலையில் அவற்றுக்குத் தலைமை ஏற்பதற்கு முழு அளவில் மார்க்சியர்களால் இன்னமும் இயலாதுள்ளது. மாறிவரும் வரலாற்று இயக்கப்போக்கைப் புரிந்துகொண்டு கோட்பாடுகளை உருவாக்கி மக்கள் போராட்டங்களைத் தலைமை ஏற்று முன்னெடுக்க வழிப்படுத்துவதாக மார்க்சியம் மட்டுமே உள்ளது. மார்க்ஸ், லெனினைக் கடவுளராக்கிய கொம்யூனிஸ்ட் கட்சித் தலைமைப்பீட மதப் புரோகிதங்கள் அத்தகைய மார்க்சியத்தை மறைபொருளுக்கு உரிய மந்திர உச்சாடனங்களாக்கிக் கெடுத்து வைத்தருக்கின்றன. அத்தகைய அதிகாரப் பீடங்களை வீழ்த்தியழித்து முன்னேறும் மார்க்சியம் மட்டுமே கெட்ட போரிடும் இன்றைய உலக நாசங்களை முடிவுக்குக் கொண்டுவர வல்லது.
மார்க்சியம் மட்டுமே மக்கள் விடுதலைக்கு வழிகாட்டும் என்ற வகையில் அதனைக் கையேற்போம் – தெளிவுறக் கற்போம்! அதனை வெறும் மந்திர உச்சாடனங்களாக்கிச் சிதைக்கும் அதிகாரப் பீடங்களின் பிடிகளில் இருந்து முன்னுரிமை கொடுத்து மெய்யான மார்க்சியத்தை மீட்டெடுப்போம்! இன்றைய வரலாற்று அரங்குக்கு உரியதாக, மக்கள் விடுதலைக்குப் பிரயோகிக்கப்படும் மார்க்சியம் – லெனினிசமாக அதனை வளர்த்தெடுப்போம்!!
நன்றி -ந.இரவீந்திரன்

Leave a comment