Homeகட்டுரைகள்பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறியது எப்படி!!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறியது எப்படி!!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.
கோய் ஆற்றின் கரையில் நிற்கும் எரிக் தூவின் முகம் வியர்வையில் மின்னுகிறது. ஆறும் மின்னுகிறது. அதன் மீது எண்ணெய்ப் படலம்.
என் பெற்றோர் மிகச்சிறந்த விவசாயிகள்” என்று சொல்லியபடியே ஆற்றோரம் இருக்கும் தனது வயல்வெளியைக் காட்டுகிறார். எங்கும் களைகள் மட்டுமே முளைத்திருக்கின்றன. கடலை, சோளம், மரவள்ளி, கருணைக் கிழங்கு என்று அனைத்தும் விளைந்த நிலம் அது. எங்களுக்குச் சாப்பிடுவதற்கும், விற்பதற்கும், சேமிப்பதற்கும் போதுமான விளைச்சல் இருந்தது. நிலம் வளமாக இருந்தது. இங்கே விவசாயிகள் ஒருபோதும் ஏழையாக இருந்ததில்லை.”
நைஜர் டெல்டாவை காட்டும் வரைப்படம்
அதெல்லாம் ராயல் டச்சு ஷெல் நிறுவனம் 1950 அங்கே எண்ணெயைக் கண்டுபிடிக்கும் வரைதான். எங்கள் கிராமத்திலிருந்து 70 மைல் தூரத்தில் அவர்கள் எண்ணெயைக் கண்டுபிடித்தார்கள். 80-களின் தொடக்கத்தில்தான் எங்கள் வயல்களில் எண்ணெய் படிவதை நாங்கள் பார்த்தோம். விளைச்சல் மெதுவாகத்தான் குறையத் தொடங்கியது. ஆனால், வரவிருக்கும் அபாயத்தை அப்போது நாங்கள் புரிந்து கொள்ளவில்லை”
அந்த டெல்டா பகுதி முழுவதும் குறுக்கு நெடுக்காக ஷெல் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் வந்தன. குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவது வழக்கமாகிவிட்டது. ஒருபுறம் இப்படி விவசாயம் அழிந்து கொண்டிருக்க, மறுபுறம் டெல்டாவிலிருந்து விவசாயிகளை மொத்தமாக வெளியேற்றுவதற்கான சட்டத்தை இயற்றியது நைஜீரிய அரசு. நாட்டின் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம்” என்ற கோட்பாட்டின்படி, நிலத்தின் மதிப்புக்கு இழப்பீடு தரவியலாது என்றும், நிலத்தை கையகப்படுத்தும் ஆண்டில் விளைந்த பயிர்களின் மதிப்பு என்னவோ அதன் அடிப்படையில் கணக்கிட்டு மட்டுமே இழப்பீடு என்றும் அறிவித்தது நைஜீரிய அரசு.
மார்ச் 1993-ல், 3 இலட்சம் ஒகோனி இன மக்கள் கென் சரோ  விவா தலைமையில் மாபெரும் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதன் விளைவாக ஒகோனி பிராந்தியத்தில் இருந்த 30 எண்ணெய்க் கிணறுகளை ஷெல் நிறுவனம் மூடவேண்டியதாயிற்று. இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது நைஜீரிய அரசு. கென் சரோவிவா உட்பட, ஒகோனி மக்கள் வாழ்வுரிமைக்கான இயக்கத்தின் தலைவர்கள் 8 பேர் மீது ஒரு பொய்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டித் தூக்கிலிட்டது நைஜீரிய அரசு. உலகம் முழுவதும் இதற்குக் கண்டனங்கள் எழுந்தன.
2004-ல் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கசிவின் காரணமாக சுமார் 40 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தன. கோய் கிராமத்தின் வயல்களுக்கும் அந்தத் தீ பரவியது. ஆறுகளிலும் ஓடைகளிலும் இருந்த மீன்கள் அழிந்தன. 2007-ல் மறுபடியும் எண்ணெய்க் கசிவு, மீண்டும் மாங்குரோவ் காடுகள் எரிந்தன. மர்மமான இருமல், புற்றுநோய், நுரையீரல் நோய், பார்வையிழப்பு உள்ளிட்ட இனம்புரியாத பல நோய்கள் பரவத்தொடங்கின. அங்கே வாழவே முடியாது என்ற நிலையில் மொத்த மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறினர்.
கோய் என்பது இப்போது ஒரு பேய்க் கிராமம். ”தடை செய்யப்பட்ட பகுதி. அருகே வராதீர்கள்” என்று ஒரு எச்சரிக்கைப் பலகையை அந்தக் கிராமத்தில் வைத்திருக்கிறது நைஜீரிய அரசு. இது ஒரு கிராமத்தின் கதை மட்டுமல்ல. நைஜர் டெல்டாவின் கதை.
30,000 சதுர மைல் பரப்புள்ள நைஜர் நதியின் டெல்டா ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது. உலகின் 3-வது மிகப்பெரிய சதுப்புநிலமும், மாங்குரோவ் காடுகளும் கொண்டது. 3 கோடி மக்கட்தொகை கொண்ட இந்த டெல்டாவின் 60% மக்கள் சுயசார்பு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்.
உலகிலேயே எண்ணெயால் சூழல் மாசுபடுத்தப்பட்ட பிராந்தியங்களில் நைஜர் டெல்டா முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடங்களில் கூட இன்றளவும் மண்ணும் நிலத்தடி நீரும் பெரிதும் மாசுபட்டே இருக்கின்றன என்கிறது 2011-ம் ஆண்டு ஐ.நா நடத்திய ஆய்வு. இன்றைக்கும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.1 கோடி காலன் எண்ணெய்க் குழாய்களிலிருந்து கசிந்து நைஜர் டெல்டாவை நாசமாக்கிக்  கொண்டிருக்கிறது.
சூழலை நாசப்படுத்துவது மட்டுமின்றி, சமூகத்தையும் நாசமாக்குகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இன்று நைஜீரியாவில் எண்ணெய்த் திருட்டு என்பது ஆண்டொன்றுக்கு 60,000 கோடி ரூபாய் புழங்குகின்ற தொழில். ஆயுதம் தாங்கிய கூலிப்படைகள், சர்வதேச கார்ட்டல்கள், அரசு பாதுகாப்புப் படையினருக்கான இலஞ்சம் எனப் பல கோடி ரூபாய் புழங்கும் இந்த தொழிலில் சுமார் 26,000 பேர் வேலை செய்கின்றனர். 60,000 கோடி ரூபாயில் 80% அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் எண்ணெய் வளத்துறையின் அதிகாரவர்க்கத்தினருக்குத்தான் செல்கிறது.
 வரலாற்றை படியுங்கள் புரிந்து கொள்ளுங்கள் செயல்படுங்கள்..நமது வாழ்க்கை நமது கையில்

Leave a comment