கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி. - யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய 23 வயதான இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய வங்கி கணக்கின் ஊடாக கோடிக் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி. -  யாழ்ப்பாணத்தில்  இளம் பெண் கைது!
குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார்.

தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலமாகியும் பயண ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல்,

பணம் வாங்குவதில் மாத்திரமே குறித்த பெண் கவனம் செலுத்துவதால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர் அது தொடர்பில் பெண்ணுடன் கடுமையாக பேசிய போது அப்பெண் தொடர்பை துண்டித்துள்ளார்.

அதை அடுத்து அப்பெண் தனது விலாசமாக கூறிய அச்சுவேலி பகுதிக்கு சென்று அப்பெண்ணை விசாரித்த போதே , அப்படியொருவர் அங்கு இல்லை எனவும் , தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனும் விடயமும் பணம் கொடுத்தவருக்கு தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து பொலிஸார் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையிலும் , வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாக கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் , குவைத் நாட்டில் வசிக்கும் தொழிலதிபரின் வழிகாட்டலில் தான் அப்பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை குறித்த பெண் வேறு நபர்களிடமும் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments