யாழ்.பண்ணை, அம்மன் சிலை விவகாரம்- உரிமை கோராத பட்சத்தில் சிலை அகற்றப்படும் என அறிவிப்பு

யாழ். பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.
யாழ்.பண்ணை, அம்மன் சிலை விவகாரம்- உரிமை கோராத பட்சத்தில் சிலை அகற்றப்படும் என அறிவிப்பு
நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே நேற்று முன்தினம் (14.04.2023) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், நீதிமன்றின் கட்டளை என யாழ். தலைமையக பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ். நீதிமன்ற வழக்கு இலக்கத்தைக் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023.04.15ஆம் திகதி யாழ்ப்பாண தலைமை பொலிஸ் பரிசோதகரினால் யாழ்.பண்ணை சுற்று வட்ட பகுதியில் ஊர்காவற்றுறை வீதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டத்திற்குப் புறம்பாக இனந்தெரியாத நபர்கள் மூலம் பார்வதி அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக உடன்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிக்கை செய்து, அந்தச் சிலையினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி சபையின் அதிகாரிக்குக் கட்டளையொன்றைப் பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சிலையினை உரிய அனுமதி பெற்று அமைத்திருப்பின், அந்த அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் 18.04.2023ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறு கட்டளையிடுவதுடன், இவ்வாறு உரிமை கோருவதற்குத் தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் எனவும் இத்தாள் அறியத்தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் யாழ். பண்ணை சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்குத் தமிழ் புதுவருடப் பிறப்பில் உருத்திர சேனா அமைப்பினால் பால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்குத் தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments